அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

Thursday 3 August 2017

தவாஃபிற்கு பின் தொழுகை

     
     தவாஃபிற்கு பின் தொழுகை           தவாஃப் செய்து முடிந்ததும் திறந்த வலது தோள் புஜத்தை மூடிக்கொள்ள வேண்டும். பின்பு மகாமு இப்றாஹிமில் தவாஃபுடைய சுன்னத் 2 ரக்ஆத்துகள் தொழ வேண்டும்.
முதல் ரக்ஆத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப் பின் சூரத்துல் காஃபிரூனும் (குல் யா அய்யுஹல் காஃபிரூன்), இரண்டாவது ரக்ஆத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப் பின் சூரத்துல் இக்லாஸையும் (குல்ஹுவல்லாஹு அஹது) ஓதுவது சுன்னத்தாகும். இதற்கான ஆதாரம்..
”நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃபை முடித்து விட்டு மகாமே இப்ராஹீம் என்ற இடத்தை அடைந்த போது மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்ற (2:125) வசனத்தை ஓதினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அத்தொழுகையில் குல்யாஅய்யுஹல் காஃபிரூன் சூராவையும், குல்ஹுவல்லாஹு அஹத் சூராவையும் ஓதினார்கள். பின்னர் திரும்பவும் ஹஜருல் அஸ்வதுக்குச் சென்று அதைத் தொட்(டு முத்தமி)ட்டார்கள். பிறகு ஸஃபாவுக்குச் சென்றார்கள்.”
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137
(பார்க்க புகாரி: 396, 1600, 1616, 1624, 1646, 1647, 1794)


தொழுத பிறகு, ”…ஹஜருல் அஸ்வதுக்குச் சென்று அதைத் தொட்(டு முத்தமி)ட்டார்கள்.” என்று ஹதீஸில் வருகிறது. எனவே, இயன்றால் இதையும் செய்து கொள்ள வேண்டும்.

சாத்தியப்படாவிட்டால் குற்றமில்லை
தவாஃப் செய்து முடித்த பிறகு மகாமே இப்ராஹீம் என்ற இடத்தில் இரண்டு ரகஅத்கள் தொழுவது அவசியம். என்று பார்த்தோம். இலட்சக்கணக்கான மக்கள் கூடும் போது, அந்த இடத்தில் தொழுவது அனைவருக்கும் சாத்தியமாகாது. அவ்வாறு சாத்தியப்படா விட்டால் கஃபாவின் எந்தத் திசையில் வேண்டுமானாலும் தொழலாம்.
ஏனெனில், எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி இறைவன் சிரமப்படுத்த மாட்டான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.(பார்க்க திருக்குர்ஆன் 2:233, 2:236, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7)

முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்
7288- حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، حَدَّثَنِي مَالِكٌ ، عَنْ أَبِي الزِّنَادِ ، عَنِ الأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : دَعُونِي مَا تَرَكْتُكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلاَفِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ ، وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ.
”நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத் தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும் தான்.
ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்கு செய்யுங்கள்”
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 7288 
எனவே, மகாமே இப்ராஹீம் என்ற இடத்தில் தொழ முடியாவிட்டால், கஃபாவின் எந்த இடத்திலும் தொழலாம். குற்றமில்லை.
பின்னர் ஜம்ஜம் நீரை பருகுதல்
நபி (ஸல்) அவர்கள் ஜம்ஜம் நீரை நோக்கிச் சென்று அதைப் பருகினார்கள். அதைத் தமது தலையிலும் ஊற்றிக் கொண்டார்கள். (நூல்: அஹ்மத் 14707)
ஜம்ஜம் நீரூற்று
மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் (3:97) கூறுகிறது. தெளிவான அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையிலும், மக்கள் கண்டு களிக்கும் வகையிலும், எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும் இருக்க வேண்டும்.
மனிதன் இன்னும் கண்டறியாத சான்றுகள் பல மக்காவில் இருக்கலாம். இனிமேல் அவை கண்டுபிடிக்கப்படலாம். மனிதன் கண்டறிந்த சான்றுகளில் முதன்மையானது ஜம்ஜம் எனும் கிணறாகும்.
இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும், மகன் இஸ்மாயீலையும் மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார்கள். குழந்தை இஸ்மாயீல் தண்ணீரின்றி தத்தளித்தபோது வானவர் ஜிப்ரீல் வந்து அந்த இடத்தில் அடித்து ஒரு நீருற்றை ஏற்படுத்தினார். அது தான் ஜம்ஜம் எனும் கிணறாகும். அந்த இடம் தான் பின்னர் ஊராக வளர்ந்த மக்கா நகராகும்.

இந்தக் கிணறு மாபெரும் அற்புதமாகவும், இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நிரூபிக்கும் சான்றாகவும் இருக்கிறது.
இந்தக் கிணறு 18 அடி அகலமும், 14 அடி நீளமும் கொண்டதாகும்.
இந்தக் கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் ஐந்து அடியாகும்.
இந்தக் கிணற்றில் இருந்து ஒவ்வொரு விநாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். ஹஜ் காலத்திலும், ரமளான் மாதத்திலும் தினமும் சுமார் 30 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
ஒவ்வொருவரும் 30 லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.
மக்காவில் மட்டுமின்றி மதீனாவின் புனிதப்பள்ளியிலும் இலட்சக்கணக்கான மக்களின் குடிநீருக்காக ஜம்ஜம் நீர் தட்டுப்பாடு இல்லாமல் தாராளமாக வினியோகம் செய்யப்படுகிறது.

பாலைவனத்தில் அமைந்துள்ள இந்தக் கிணறு குறைந்த ஆழம் கொண்டதாகும். அருகில் ஏரிகளோ, கண்மாய்களோ, குளம் குட்டைகளோ இல்லாமல் இருந்தும் அந்தக் கிணற்றில் இருந்து தினமும் 30 லட்சம் மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வேண்டிய அளவுக்கு வழங்கப்பட்டும் அங்கு நீர் வற்றிப் போகவில்லை என்பது மிகப்பெரிய அற்புதமாகும்.
எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ, பல வருடங்களிலோ தூர்ந்து போய் விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.

எந்த ஒரு நீர்நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும், கிருமிகள் உற்பத்தியாவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருந்துகள் நீர்நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகள் மூலமும் அது பாதுகாக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.

பொதுவாக மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது. ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்டபோது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிரூபிக்கப்பட்டது.

பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுப்பவை. இதை ஜம்ஜம் நீரை அருந்தியவர்கள் அனுபவத்தில் உணரலாம்.
மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது.

'அங்கே அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம் நடக்கிறது' என்று பலவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது போல் இதையும் கருதக் கூடாது.
மற்ற அற்புதங்கள் எந்தச் சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை. குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் தினசரி 30 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடிநீராகப் பயன்படுகிறது. பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டும் உள்ளது. எனவே இது மெய்யான அற்புதமாகும். இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

ஜம்ஜம் நீர் பற்றி தினகரன் செய்தி
மெக்கா: சவூதி அரேபியாவில் மெக்காவின் கஃபாவுக்கு அருகே அமைந்துள்ளது ஜம் ஜம் கிணறு 5 ஆயிரம் வருட வரலாறு கொண்ட இக்கிணற்றின் நீரை, உலகில் உள்ள பெரும்பாலான‌ முஸ்லிம்கள் அருந்தியிருப்பார்கள். மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொள்ள உலகில் பல தேசங்களில் இருந்து வரும் முஸ்லிம்கள் இந்த புனித கிணற்று நீரை குறைந்தது 20 லிட்டராவது எடுத்து தங்களது நாட்டிற்கு செல்வார்கள். ஒரு முறை ஜரோப்பா மருத்துவர்கள், சுகாதாரத்திற்காக இந்த கிணற்றினை சுத்தப்படுத்த வேண்டும் என்று சவூதி அரசுக்கு ஆலோசனை கூறினார்கள். இதை ஏற்றுக்கொண்ட சவுதி அரசு 8 அதி நவின ராட்சத பம்பு செட்டுளை கொண்டு தொடர்ந்து இரவும், பகலுமாக 15 நாட்கள் இந்த நீரை இறைத்தது. ஆனால் நீரின் அளவு குறையவில்லை. மாறாக நீரின் மட்டம் ஒரு அங்குலம் உயர்ந்து இருந்தது. ஒரு வினாடிக்கு 8 ஆயிரம் லிட்டர் என்ற அளவில், தினமும் 691.2 மில்லியன் லிட்டர் தண்ணீரை தொடர்ச்சியாக ராட்சத மோட்டார்கள் மூலம் இந்த கிணற்றுத்தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.

நல்ல நீர் வளம் உள்ள ஒரு பெரிய கிணற்றில் உள்ள நீரை ஒரு வருடம் எடுக்கும் அளவு நீரை, ஒரே நாளில் 'ஜம் ஜம்' கிணற்றில் இருந்து எடுக்கபடுவது மிகப்பெரிய அதிசயம், அதை விட அதிசயம் மில்லியன் கணக்கில் நீரை தினமும் எடுத்தும், அப்போதும் இதன் அளவு குறைவதில்லை. சுவையும் மாறியதில்லை.ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் உலகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

குறைந்த அளவே ஆழம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில் அமைந்துள்ள இந்தக் கிணறு, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து  லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது ஆச்சரியப்படவைக்கிறது.  பெரும்பாலான‌ நீர் ஊற்றுகள் சில வருடங்களிலோ பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது அற்புதமாகும். ஜம் ஜம் கிண்று அருகே எந்த தாவரமும் வளருவதில்லை.எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருந்துகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது.

மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது .பூமியிலுள்ள நீரில் மிகச்சிறந்தது 'ஜம் ஜம்' நீர் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை என இத்தண்ணீரை பருகியவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது  இது கிருமிகளை அழிக்க வல்லது. உலகம் முழுவதும் ஏராளமான ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிகழ்ந்து வந்தாலும் தினசரி லட்சக்கணக்கான‌ மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும் அதுவும் பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Oct 1, 2015

No comments:

Post a Comment

popular posts......

Auto Scroll Stop Scroll