அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

Thursday 3 August 2017

துல்ஹஜ் நாள்-10 மினாவில் கல்லெறிதல்

துல்ஹஜ் நாள்-10 மினாவில் கல்லெறிதல்

இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனது கட்டளைப் படி தமது மகனைப் பலியிட முன் வந்த போது ஷைத்தான் அவர்களுக்குக் காட்சி தந்தான்.
1) ஜம்ரதுல் அகபா என்ற இடத்தில் அவன் மீது ஏழு தடவை சிறு கற்களால் எறிந்தார்கள்.

2) அதன் பிறகு ஜம்ரதுல் உஸ்தா எனும் இடத்தில் மீண்டும் காட்சி தந்தான். அங்கேயும் ஏழு தடவை கற்களால் எறிந்தார்கள்.
3) அதன் பிறகு ஜம்ரதுல் ஊலா எனுமிடத்தில் காட்சி தந்தான். அங்கேயும் ஏழு தடவை சிறு கற்களால் எறிந்தார்கள்.
பைஹகீ, ஹாகிம், இப்னு குஸைமா ஆகிய நூல்களில் இந்த விபரம் இடம் பெற்றுள்ளது.


அதை நினைவு கூரும் விதமாகவும், இறைவனது கட்டளை நமது சிற்றறிவுக்குப் புரியாவிட்டாலும் அதை அப்படியே ஏற்போம் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும், ஷைத்தான்களின் தூண்டுதலுக்குப் பலியாக மாட்டோம் என்பதைப் பிரகடனப்படுத்தும் வகையிலும் அந்த இடங்களில் கல்லெறிய வேண்டும். இந்த மூன்று இடங்களும் மினாவில் அமைந்துள்ளன. எனினும், இன்று ஜம்ரதுல் அகபாவில் மட்டும் தான் கல் எறிய வேண்டும். மற்ற இடங்களில், அடுத்தடுத்த நாட்களில் எறிய வேண்டும்.

ஜம்ரதுல் அகபா
முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்குள் நுழையும் போது இடப்புறமாக ஜம்ரதுல் அகபா எனும் இடம் அமைந்துள்ளது.
துல் ஹஜ் பத்தாம் நாள் காலையில் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு மினாவை அடைந்ததும் ஜம்ரதுல் அகபா என்ற இடத்தில் மட்டும் ஏழு கற்களை எறிய வேண்டும்.
(புகாரி 1753)

ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூற வேண்டும்.
(புகாரி 1753)

ஏழு கற்களை எறிந்த பின் கிப்லாவை நோக்கி நின்று கொண்டு இரு கைகளையும் உயர்த்தி நீண்ட நேரம் துஆச் செய்ய வேண்டும்.
(புகாரி 1753)

எறியப்படும் கற்கள் விரல்களால் சுண்டி விளையாடும் அளவுக்குச் சிறிதாக இருக்க வேண்டும்.
(முஸ்லிம் 2289)
இடப்புறம் கஅபா, வலப்புறம் மினா
அப்துர் ரஹ்மான் இப்னு யஸித்(ரஹ்) அறிவித்தார். ”அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்ததும், தம் இடப் பக்கத்தில் இறையில்லம் கஅபாவும் வலப் பக்கத்தில் மினாவும் இருக்கும் படி நின்று கொண்டு, ஏழு சிறு கற்களை எறிந்தார். பிறகு 'இவ்வாறுதான், பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி(ஸல்) அவர்களும் எறிந்தார்கள்!' என்று கூறினார்கள். 
(புகாரி 1748)

நெருக்கியடித்தலோ, சண்டையோ, சச்சரவோ, கூச்சலோ போடக்கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து கொண்டு கல்லெறிந்ததை நான் பார்த்துள்ளேன். அங்கே அடிதடி இல்லை; விரட்டுதல் இல்லை; ”வழி விடு, வழி விடு” என்பது போன்ற கூச்சல் இல்லை.
அறிவிப்பவர்: குதாமா பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்கள்: நஸயீ 3011, திர்மிதீ 827, இப்னுமாஜா 3026.

கல்லெறியும் நேரம்
கல்லெறியும் இடத்தில் தான் பெரும்பாலும், முண்டியடித்தலும், கடுமையான கூட்ட நெரிசலும், அதன் காரணமாகவே ஒவ்வொரு வருடமும் உயிரிழப்பும் ஏற்படுகிறது. நண்பகல் நேரத்திலேயே கல்லெறிய இயலாவிட்டால், சூரியன் மறையும் வரை கல்லெறியலாம். இயலாத பட்சத்தில், சூரியன் மறைந்து விட்டாலும், குற்றமில்லை. கல்லெறியலாம். 

ஆண்கள், சூரிய உதயத்திற்கு முன் கல்லெறியக் கூடாது.
10-ஆம் நாள் மஃரிபிற்கு பிறகு வரும், 10-ம் நாள் இரவே மினாவுக்கு திரும்பியவர்களாக இருந்தாலும், அவர்களும் சூரிய உதயத்திற்கு முன் கல்லெறியக் கூடாது. இதற்கான ஆதாரம் வருமாறு:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தின் பலவீனர்களை முன் கூட்டியே அனுப்பிய போது, ”ஜம்ரதுல் அகபாவில் சூரியன் உதயமாகும் முன் கல்லெறிய வேண்டாம்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: திர்மிதீ 817.

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு பதனு முஹஸ்ஸர் என்ற இடத்தை அடைந்ததும் (ஒட்டகத்தைச்) சற்று விரைவு படுத்தினார்கள். ஜம்ரதுல் அகபாவை அடையும் வழியில் புறப்பட்டார்கள். மரத்திற்கு அருகில் உள்ள ஜம்ரதுல் அகபாவை அடைந்ததும் ஏழு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூறினார்கள். சுண்டி எறியும் சிறு கற்களையே எறிந்தார்கள். பதனுல் வாதி என்ற இடத்திலிருந்து எறிந்தார்கள்”
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 2137

பெண்களுக்கு மட்டும் சலுகை (Day 10)
முன்னரே புறப்பட்டுச் சென்றவர்களும் சூரியன் உதயமான பிறகே கல்லெறிய வேண்டும் என்றாலும் பெண்கள் மட்டும் மக்கள் கூடுவதற்கு முன்பே கல்லெறிந்து கொள்ளலாம்.

அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபாவில் இரவில் தங்கினார்கள். அப்போது தொழலானார்கள். சிறிது நேரம் தொழுததும், மகனே! சந்திரன் மறைந்து விட்டதா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன். மீண்டும் சிறிது நேரம் தொழுது விட்டு மகனே சந்திரன் மறைந்து விட்டதா? என்றார்கள். நான் ஆம் என்றேன். அப்போது அவர்கள், புறப்படுங்கள் என்றார்கள். நாங்கள் புறப்பட்டோம். ஜம்ரதுல் அகபாவை அடைந்தவுடன் கல்லெறிந்தார்கள். பிறகு திரும்பிச் சென்று தமது தங்குமிடத்தில் சுபுஹ் தொழுதார்கள். ”இருட்டிலேயே நீங்கள் கல்லெறிந்து விட்டீர்களே” என்று கேட்டேன். அதற்கவர்கள் ”நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களுக்கு (இவ்வாறு செய்ய) அனுமதி வழங்கியுள்ளனர்” என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ்
நூல்: புகாரி 1679

இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (Day 10)
ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டவர், இப்போது இஹ்ராமிலிருந்து ஓரளவு விடுபடுகிறார். அதாவது, இஹ்ராம் கட்டியதால் அவருக்கு விலக்கப்பட்டிருந்த நறுமணம், தைக்கப்பட்ட ஆடைகள் போன்றவற்றை அவர் இனி பயன்படுத்திக் கொள்ளலாம். மனைவியுடன் உடலுறவு கொள்வதைத் தவிர மற்ற அனைத்தும் ஹலாலாகும்.
”நீங்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 1708

”நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு, அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன்பும், பத்தாம் நாளில் கஃபாவை தவாஃப் செய்வதற்கு முன்பும் கஸ்தூரி கலந்த நறுமணத்தைப் பூசி விட்டேன்”
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 1754, 5922 முஸ்லிம் 2040

இதற்கு ஒரு நிபந்தனை உள்ளது
கல்லெறிந்து விட்டவர் உடலுறவு தவிர, இஹ்ராமிலிருந்து ஓரளவு விடுபடுகிறார் என்றாலும், இதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. அது என்னவெனில், துல்ஹஜ் 10 ஆம் நாள் அஸர் முடிந்து, 11 ஆம் நாளின் ஆரம்பமாகிய மஃரிபிற்கு முன்னதாக தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டால் தான் இந்த சலுகை.

கல்லெறிவதற்கு தாமதமாகி தவாஃப் செய்வதற்கு முன்னரே மஃரிபை அடைந்துவிட்டால், இப்போது நீங்கள் ”தைக்கப்படாத ஆடையையே அணிய வேண்டும். நறுமணம் பூசக்கூடாது” உள்ளிட்ட செயல்களை உள்ளடக்கிய இஹ்ராமிலேயே தொடர வேண்டும். இதற்குரிய ஆதாரம்..
“இது உங்களுக்கு சலுயையளிக்கப்பட்ட நாள். நீங்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும். இந்த கஅபாவை தவாஃப் செய்வதற்கு முன்னால் மாலை நேரத்தை அடைந்துவிட்டால், இஹ்ராமிலேயே தொடர்ந்து இருந்துவிடுங்கள்” என்று நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: அபூதாவூத்: 1708)

No comments:

Post a Comment

popular posts......

Auto Scroll Stop Scroll